அரியலூர் அருகே பரிதாபம்: கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி - 15 ஆடுகளும் செத்தன

அரியலூர் அருகே கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் இறந்தனர். இந்த விபத்தில் 15 ஆடுகளும் செத்தன.

Update: 2019-11-21 22:00 GMT
கீழப்பழுவூர், 

அரியலூர் அருகே உள்ள சாத்தமங்களத்தை சேர்ந்த பழனிச்சாமி மனைவி லதா(வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(41). இவர்கள் 2 பேரும் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் ஆடுகளை அருகே உள்ள தரிசு நிலத்தில் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றனர். பின்னர் மாலை 6 மணி அளவில் ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்தனர். அரியலூர்-தஞ்சாவூர் சாலையில் சாத்தமங்களம் அருகே ஆடுகளை ஓட்டி வந்தபோது, அந்த வழியாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லதா, முருகேசன் மற்றும் ஆடுகள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த லதாவும், முருகேசனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 ஆடுகள் செத்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. விபத்து ஏற்படுத்திய கார் சாலையோரம் இருந்த வயலில் புகுந்து நின்றது. விபத்து நடந்ததும் டிரைவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடி விட்டார்.

இதனை அறிந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் பலியான லதா, முருகேசனின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்த ஆடுகளை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அறிந்ததும், லதா, முருகேசனின் உறவினர்கள் மற்றும் சாத்தமங்களம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் சம்பவ இடத்தில் திரண்டு அரியலூர்-தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், உயிரிழந்த லதா, முருகேசனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். விபத்து ஏற்படுத்திய டிரைவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் கதிரவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, மோகன்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்களது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்- தஞ்சாவூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்