சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை - மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. மேலும், 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-30 22:15 GMT
சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், வட கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளித்தது போல பருவமழை குறைவாக பதிவாகி இருக்கிறது. ஆரம்பத்தில் ஓரளவு மழை பெய்தாலும், அதன் பின்னர் பெரிய அளவில் மழை இல்லை. வட கடலோர மாவட்டமான சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பருவமழை ஏமாற்றி வந்தது.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதியில் இருந்து சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்து வருகிறது. கடந்த 27-ந்தேதி நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது.

அதிலும் புறநகர் பகுதியான தாம்பரத்தில் ஒரே நாளில் மட்டும் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் சில இடங்களில் மழை இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை விடிய விடிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, மெரினா கடற்கரை, அடையாறு, கிண்டி, கோடம்பாக்கம், அரும்பாக்கம் உள்பட பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நகரின் ஓரிரு இடங்களில் கனமழையும் கொட்டியது. இதனால் நேற்று சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

வேளச்சேரி, மதுரவாயல், தாம்பரம், பெருங்களத்தூர், மாதவரம் உள்பட புறநகரின் பல இடங்களில் மழை பரவலாக பெய்தது. விடிய விடிய மழை பெய்ததால் சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தை பார்க்க முடிந்தது.

கடந்த 3 நாட்களாகவே இரவில் இருந்து அதிகாலை வரை தான் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் இரவு நேரங்களில் இருந்து காலை வரை தான் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

நேற்று காலையில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகக்கூட்டங்களுடன் ரம்மியமான சூழல் இருந்து வந்தது. அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்தது. நிலத்தடி நீருக்கு பெரும் ஆதாரமாக இருக்கும் பருவமழை, தற்போது தொடர்ச்சியாக பெய்வதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்