மொபட் மீது கார் மோதியதில் டீக்கடைக்காரர் பலி விபத்தை தடுக்க நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

துவரங்குறிச்சி அருகே மொபட் மீது கார் மோதியதில் டீக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தொடர் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-30 22:30 GMT
துவரங்குறிச்சி,

துவரங்குறிச்சியை அடுத்த கல்லாமேடு அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ் (வயது 65). இவர் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று மாலை திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு என்ற இடத்தில் மொபட்டில் அவர் சென்றார்.

அப்போது மதுரையில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற கார், மொபட் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட வரதராஜ், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி ஆம்புலன்சில் ஏற்றினர்.

சாலை மறியல்

இந்நிலையில் கல்லாமேடு பகுதியில் நடைபெறும் தொடர் விபத்துகளால் உயிர்பலி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரையில் சாலையில் தடுப்பு (பேரிகார்டு) அமைத்திட வேண்டும். மின்கோபுர விளக்கு அமைத்திட வேண்டும் என்று கூறி திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம், மருங்காபுரி தாசில்தார் சாந்தி மற்றும் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதுடன், வருகிற 5-ந் தேதி அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணவழிவகை செய்யப்படும் என்று கூறினர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.

தடுப்புகள்

பின்னர் இறந்தவரின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையே விபத்து நடந்த இடத்தில், சாலையில் தடுப்புகள் (பேரிகார்டுகள்) அமைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்