தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள் விவசாயிகள் கவலை

தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-11-30 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 30 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்தநிலையில் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தன. இதனால் இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தற்போது முகாமிட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 30 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தன. பின்னர் அவைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேகலகவுண்டனூர் கிராமத்திற்குள் புகுந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த யானைகள் அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, குடை மிளகாய் உள்ளிட்டவைகளை கால்களால் மிதித்து நாசம் செய்தன. நீண்ட நேரம் அப்பகுதியில் சுற்றித் திரிந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

விவசாயிகள் கவலை

நேற்று காலையில் விவசாய நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் காட்டு யானைகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு கவலையடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று சேதமடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டனர். அப்போது வனத்துறையினரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்