மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு: கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் சாட்சியம்

மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர்.

Update: 2019-12-02 22:30 GMT
திண்டுக்கல்,

கொடைக்கானல் வடகவுஞ்சி வனப் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தனர். இதையறிந்த சிறப்பு அதிரடிப்படையினர், விரைந்து சென்று அவர்களை சுற்றிவளைத்தனர். அப்போது சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு இறந்தார். ஆனால், 7 பேர் தப்பிவிட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருக்கும் மாவோயிஸ்டுகளான கண்ணன், பகத்சிங், காளிதாஸ், செண்பகவல்லி, ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதேபோல் ஜாமீனில் வெளியே இருக்கும் ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் ஆஜராகினர்.

இதையடுத்து நீதிபதி ஜமுனா முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் மாவோயிஸ்டு இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக அடுக்கம் அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் மாவோயிஸ்டுகள் சென்றதாக போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தாமரைக்குளத்தை சேர்ந்த மேரி என்பவர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அதேபோல் கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராஜராம் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் எதிர்தரப்பு வக்கீல் கண்ணப்பன் குறுக்கு விசாரணை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் வாதாடினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நாளை (புதன்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி ஜமுனா உத்தரவிட்டார். மாவோயிஸ்டு வழக்கு விசாரணைக்கு வந்ததையொட்டி கோர்ட்டு வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்