கொத்தமங்கலத்தில் வேரோடு அகற்றப்படும் ஒவ்வொரு சீமைக்கருவேல மரத்திற்கும் பரிசு

கொத்தமங்கலத்தில் வேரோடு அகற்றப்படும் ஒவ்வொரு சீமைக்கருவேல மரத்திற்கு பரிசு வழங்கப்படுகிறது. இளைஞர்களின் புதிய முயற்சியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Update: 2019-12-04 22:45 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் நீர்நிலைகளை சீரமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் இணைந்து நற்பணி மன்றத்தை உருவாக்கினர். பின்னர் அதன் மூலம் நன்கொடைகள் பெற்று, கிராமத்தில் உள்ள குளம், குட்டை, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து பருவ மழைத் தண்ணீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் சேமித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த இளைஞர் மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது கொத்தமங்கலத்தில் பல வருடங்களுக்கு முன்பு வரை பிரமாண்டமாக இயங்கி வந்த புதன் சந்தையை மீண்டும் செயல்படுத்துவது. தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கும் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டும். அதற்காக ஒரு சீமைக்கருவேல மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்து வந்தால் ரூ.3 பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றி நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமும் கிராம மக்களுக்கு தெரிவித்தனர்.

பரிசு வழங்கப்பட்டது

இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியதால் பலரும் சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். “பனைமர காதலர்கள்'' என்ற அமைப்பினர் பனை விதைகளை விதைத்ததுடன், சீமைக் கருவேல மரங்களை வேரோடு வெட்டி அழித்து வருகின்றனர். அதற்காக ஒரு மரம் அறுக்கும் எந்திரத்தை ஒருவர் இலவசமாக வழங்கி உள்ளார். இந்தநிலையில் தான் சீமைக்கருவேல மரக்கன்றையோ, மரத்தையோ வேரோடு எடுத்து வந்து கொடுத்தால் ரூ.3 பரிசு தரப்படும் என்பதை அறிந்து, “பனைமர காதலர்கள்'' அமைப்பினரும், ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் சீமைக்கருவேல மரத்தை எடுத்து வந்து கொடுத்து ரூ.3 வீதம் பெற்று செல்கின்றனர்.

இதேபோல தொடர்ந்து செய்தால் சில மாதங்களில் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக கொத்தமங்கலம் மாறிவிடும் என்கிறார்கள் அப்பகுதி இளைஞர்கள். அவ்வாறு ரூ.3 விலை கொடுத்து வாங்கப்படும் சீமைக் கருவேல மரங்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக சீமைக்கருவேல மரங்களை கொண்டு வந்தால் பரிசு கொடுக்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தும் இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்