ஊத்தங்கரை அருகே, தனியார் பள்ளியில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்து கிளீனர் சாவு

ஊத்தங்கரை அருகே தனியார் பள்ளியில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்து கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-04 23:00 GMT
ஊத்தங்கரை, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 39). இவர் ஊத்தங்கரை அருகே வித்யா விகாஸ் என்ற தனியார் பள்ளியில் உள்ள வாகனத்தில் கிளீனராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கார்த்திகேயன் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் டிராக்டர் மூலம் தண்ணீர் ஏற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக டிராக்டரில் இருந்து தவறி விழுந்து கீழே விழுந்தார். இதில் கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இந்த விபத்து தொடர்பாக கார்த்திகேயனின் உறவினர்களுக்கு தாமதமாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அங்கு சென்று கார்த்திகேயனின் உடலை வாங்க மறுத்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளியில் இருந்த கார் கண்ணாடியை அவர்கள் உடைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் மற்றும் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்