நுண்பார்வையாளர்கள் மூலமாக, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை - கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்

உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளை நுண்பார்வையாளர்கள் மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-04 22:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி முதல்கட்டமாகவும், 30-ந் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்துவதற்கு 28 தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 363 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளையும், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி பெட்டிகள் மற்றும் தளவாட பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான பட்டியல் தயார் செய்து அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் ஊராட்சி பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சார வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், திட்ட இயக்குனர்(மகளிர் திட்டம்) கோமகன், ஆர்.டி.ஓ.க்கள் கவிதா(திருப்பூர்), இந்திரவள்ளி(உடுமலை), கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சந்திரகுமார், உதவி திட்ட அதிகாரி முருகேசன், முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்