சட்டசபை தேர்தலில் பங்கஜாவையும், எனது மகளையும் தோற்கடிக்க பா.ஜனதா தலைவர்கள் வேலை செய்தனர் - ஏக்நாத் கட்சே குற்றச்சாட்டு

பங்கஜா முண்டேவையும், எனது மகளையும் தேர்தலில் தோற்கடிக்க பா.ஜனதா தலைவர்கள் சிலர் வேலை செய்தனர் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கூறினார்.

Update: 2019-12-04 23:00 GMT
மும்பை,

மராட்டியத்தில் முந்தைய பாரதீய ஜனதா அரசாங்கத்தில் அப்போதைய முதல்-மந்திரியாக இருந்த தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் ஏக்நாத் கட்சே. அப்போது நில அபகரிப்பு உள்ளிட்ட புகாரில் சிக்கிய அவர், தனது மந்திரி பதவியை இழக்க நேரிட்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் உள்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டது.

இருப்பினும் அந்த தேர்தலில் ஏக்நாத் கட்சேயின் மகள் ரோகினிக்கு பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் சிவசேனா அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டவரிடம் தோல்வியை தழுவினார். இதேபோல பார்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி பங்கஜா முண்டேயும் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

தேர்தல் முடிவுக்கு பின்னர் கட்சி தலைவர்கள் மீது பங்கஜா முண்டே அதிருப்தியில் இருந்து வந்தார். அண்மையில் திடீரென அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்த கட்சியின் பெயரை நீக்கி பரபரப்பை உண்டாக்கினார். மேலும் அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப முடிவு எடுக்க போவதாக முகநூலிலும் பதிவிட்டார். இதனால் அவர் பாரதீய ஜனதாவில் இருந்து விலகுகிறாரா என கேள்வி எழுந்த நிலையில், தான் கட்சியில் இருந்து விலக மாட்டேன் என்று நேற்றுமுன்தினம் கூறினார்.

இந்த நிலையில், தனது மகளையும், பங்கஜா முண்டேயையும் தேர்தலில் தோல்வி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர் வேலை பார்த்ததாக ஏக்நாத் கட்சே நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:- எனது மகள் ரோகினியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி தலைவர்கள் சிலர் செயல்பட்டதாக நான் கருதுகிறேன். இதையே தான் பங்கஜா முண்டேவும் உணருகிறார். அவர்களை பற்றி கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலிடம் தெரிவித்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்