நிரம்பும் தறுவாயில் உள்ளதால் மதுராந்தகம் ஏரி கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

நிரம்பும் தறுவாயில் உள்ளதால் மதுராந்தகம் ஏரி கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-04 22:30 GMT
மதுராந்தகம், 

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் நீர் பிடிப்பு பரப்பளவு 2,411 ஏக்கரில் உள்ளது. 23.3 அடி உயரம் கொண்டது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி நேற்று நிலவரப்படி 20.5 அடியை எட்டியுள்ளது. ஏரியில் உபரி நீர் வெளியேறும் பகுதியில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. ஏரி நிரம்பும் தறுவாயில் உள்ளதால் உபரிநீர் வெளியேறி செல்லக்கூடிய கரையோர கிராமங்களான கத்திரிசேரி, விழுதமங்கலம், முன்னுத்திகுப்பம், முள்ளி, வளர்பிறை, முருக்கஞ்சேரி, வீராணங்குண்ணம், தச்சூர், நீலமங்கலம் உள்ளிட்ட 21 கிராம மக்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவின் பேரில் மதுராந்தகம் ஆ.டி.ஓ. லட்சுமிபிரியா, மதுராந்தகம் ஆர்.டி.ஓ. வேல்முருகன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் குமார் ஆகியோர் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் குமார் கூறுகையில்:-

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஏரியின் உபரிநீர் எந்தநேரமும் வெளியேற்றப்படலாம் என்பதால் கரையோர 21 கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள கசிவை தற்போது சரி செய்ய இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்

மதுராந்தகம் ஆ.டி.ஓ லட்சுமிபிரியா கூறுகையில்:-

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஏரியின் உபரிநீர் எந்த நேரமும் வெளியேற்றப்படலாம் என்ற சூழல் உள்ளதால் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் சமுதாய கூடங்களில் அவர்கள் தங்குவதற்கான இடமும் தண்ணீர், உணவு, துணி மற்றும் மருத்துவ பொருட்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்