தொற்றுநோய் பரவுவதை தடுக்க துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி நகராட்சி ஆணையர் தகவல்

தொற்றுநோய் பரவுவதை தடுக்க துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறினார்.

Update: 2019-12-05 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் குளம் போல தேங்கியது. தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றும் பணி மற்றும் சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் நாகைக்கு வந்தார். தொடர்ந்து அவர், நாகை பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார். அப்போது தொற்று நோய் ஏற்படாமல் இருக்க துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூரில் உள்ள நகராட்சி நகர் நல மையத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

நோய் எதிர்ப்பு சக்தி

முகாமிற்கு நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமை தாங்கினார். நகர்நல அலுவலர் பிரபு, நகராட்சி டாக்டர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஆணையர் கூறியதாவது:-

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டுக்கொண்டதன் படி நாகை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு தொற்றுநோய் பரவுவதை தடுக்க தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் பணி பாதுகாப்பு மற்றும் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும்.

120 பேருக்கு தடுப்பூசி

எனவே நகராட்சி பணியாளர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாகை நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 230 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். அதில் முதல்கட்டமாக 120 பேருக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துப்புரவு ஆய்வாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்