விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பிரதமர், நிதி மந்திரிக்கு வெங்காயம் அனுப்பும் போராட்டம்

வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பிரதமர், நிதி மந்திரிக்கு வெங்காயம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-12-06 22:30 GMT
பெரம்பலூர், 

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 தாண்டி விற்கப்படுகிறது. இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பெரம்பலூரில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் பெரம்பலூரில் நூதன போராட்டமாக வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் நரேந்திரமோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தலா அரை கிலோ சின்ன வெங்காயத்தை தலைமை அஞ்சலகம் மூலம் அனுப்பும் போராட்டம் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று மதியம் நடந்தது.

இதற்கு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், வக்கீல் அணி மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். அப்போது அவர்கள் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி மந்திரி நிர்மலா சிதாராமனுக்கும் தலா அரை கிலோ சின்ன வெங்காயத்தை அஞ்சலகத்தில் பார்சல் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த நூதன போராட்டத்தினை அஞ்சலகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் வியப்புடன் பார்த்தனர்.

இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி கூறுகையில், சமையலுக்கு அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்களால் அதை விலை கொடுத்து வாங்க இயலவில்லை. 

விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு அலட்சியமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை அதனால் அதன் விலையேற்றம் குறித்து தனக்கு தெரியவில்லை என கூறியிருப்பது மக்கள் பிரச்சினையில் அவருக்கு போதிய அக்கறை இல்லாததையே காட்டுகிறது. எனவே, அவர் வெங்காயத்தின் விலையைத் தெரிந்துகொள்ளவும், வெங்காயம் சாப்பிட ஏதுவாகவும் வெங்காயத்தை அஞ்சலகம் மூலம் பார்சலில் அனுப்பி வைக்கிறோம். மேலும் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்