மருத்துவ மாணவர்கள் அதிக அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்

மருத்துவ மாணவர்கள் அதிக அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-12-08 23:30 GMT
புதுச்சேரி,

இந்திய வாதவியல் சங்கத்தின் 2019-ம் ஆண்டு மாநாடு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் உள்ள கருத்தரங்கு கூட்டத்தில் நடந்தது. இதன் தொடக்க விழாவிற்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நாட்டில் உள்ள முக்கிய மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் 3-வதாக உள்ளது. மருத்துவ ஆராய்ச்சி மிகவும் முக்கியமானதாகும். எனவே மருத்துவ மாணவர்கள் அதிக அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். இந்தியாவில் உள்ள மக்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளூரிலேயே பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நாம் என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது கூட தெரியாமல் உள்ளனர். மத்திய அரசு சுகாதாரத்துறைக்கு வழங்கும் நிதியை குறைந்த அளவே ஒதுக்கி வருகிறது.

கிராமப்புற பகுதிகளில் சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்டவை இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதுபோல் நகர்ப்புற மக்கள் பணக்கார வாழ்க்கையில் ‘ஜங்க் புட்’ மற்றும் துரித உணவுகளை சாப்பிட்டு நிறைய நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். புதுச்சேரியில் சுகாதாரம் சிறந்த முறையில் உள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் இலவசமாக இருதய சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டவைகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றது. இதனால் ஜிப்மர் ஏழைகளின் சொர்க்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் பிரெஞ்சு தூதரக அதிகாரி கேத்ரீன் ஸ்வார்டு, இந்திய வாதவியல் சங்கத்தின் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் காவிரி, தலைவர் டெபாஸ்கி டான்டா மற்றும் மருத்துவ வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்