கழிவுநீர் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு

கழிவுநீர் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-12-09 23:00 GMT
குளித்தலை,

குளித்தலை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வக்கீல் சாகுல்அமீது மற்றும் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பொதுமக்கள் குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமானிடம் நேற்று மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில், பள்ளிவாசல் தெருவில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள தாங்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்கிறோம்.

தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீர், வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் சாக்கடை வழியாக சென்று சிறிய வாய்க்காலில் சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் கழிவுநீர் சென்ற இந்த வாய்க்காலை சில தனிநபர்கள் ஆங்காங்கே ஆக்கிரமித்து, மண்களால் மூடியதால் கழிவுநீர் செல்லவில்லை.

துர்நாற்றம்

இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு வீட்டிற்குள் புகும்நிலை உள்ளது. மேலும் கொசு தொல்லையின் காரணமாக இப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் குடும்பங்களை தொற்றுநோயிலிருந்து காக்கும்வகையில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

புதிய வீடுகட்டி தரக்கோரி..

இதேபோல குளித்தலை மலையப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெபமாலை (வயது 70). இந்தநிலையில் குளித்தலை பகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக கடந்த 5-ந்தேதி ஜெபமாலையின் வீட்டின் ஒருபக்க சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. வீட்டில் உள்ள மற்ற மூன்று சுவர்களும் விரிசல் விட்ட நிலையில் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள அந்த வீட்டில் தான் வசித்து வருவதாகவும், தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதால் முதியோர் உதவித்தொகை மட்டும் வைத்துக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எனவே அரசு உதவியில் தனக்கு புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தார். இதேபோல குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி சேவை செய்துவரும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை, அவர்கள் ஏற்கனவே தங்கி சேவை செய்து வரும் இடத்திலேயே அவர்களை தொடர்ந்து தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்