திருமண உதவித்தொகை விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

தலைவாசலில் திருமண உதவித்தொகை விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-12-11 23:15 GMT
தலைவாசல், 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயி. இவருடைய மகள் பிரியா பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு கடந்த 1-ந் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு 4 நாட்களுக்கு முன்பு பிரியாவுக்கு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்ததிட்டத்தில் ரூ.25 ஆயிரம் ரொக்கமும், அரை பவுன் தங்கமும் வழங்கப்படும்.

இந்த நிலையில் திருமண நிதி உதவிக்கு விண்ணப்பித்தது தொடர்பாக தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரிக்க வெங்கடேசன் முடிவு செய்தார். அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததால், தனது அக்காள் மகன் கார்த்திக்கை (வயது 28), தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்து வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று காலையில் கார்த்திக் சென்றார். அங்கு சமூக நலத்துறை விரிவாக்க அலுவலரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த கீதாவை (56) சந்தித்து திருமண உதவித்தொகை விண்ணப்பம் குறித்து அவர் கேட்டார். அதற்கு தங்கள் விண்ணப்பம் ஆன்-லைனில் வந்துள்ளது. இந்த விண்ணப்பத்தை நேரில் வந்து விசாரித்து மாவட்டசமூக நல அலுவலகத்திற்கு பரிந்துரை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கீதா, கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.

அதற்கு கார்த்திக் பணம் தர முடியாது என்று கூறியதாகவும், உடனே கீதா அந்த விண்ணப்பத்தை தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் அந்த லஞ்ச பணத்தை தருவதாக கூறிவிட்டு வெளியே வந்தார்.

பின்னர் அவர் இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பெண் அதிகாரியை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அவர்கள் கார்த்திக்கிடம் லஞ்ச பணம் கொடுக்க ரசாயன பவுடர் தடவிய ரூபாய்நோட்டுகளை கொடுத்தனர்.

நேற்று மாலை 6 மணியளவில் போலீசாரின் திட்டப்படி, கார்த்திக், பெண் அதிகாரி கீதாவுக்கு தொலைபேசியில் ெதாடர்பு கொண்டு தான் லஞ்ச பணம் 3 ஆயிரம் ரூபாயுடன் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு மரத்தடியில் காத்திருப்பதாக பேசி உள்ளார். உடனே அலுவலகத்தில் இருந்து ெவளியே வந்த கீதா, மரத்தடியில் காத்திருந்த கார்த்திக்கிடம் லஞ்ச பணத்தை வாங்கி உள்ளார்.

அப்போது அங்கு மாறு வேடத்தி்ல் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் கீதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை அலுவலகத்திற்குள் அழைத்து ெசன்று ஆவணங்களை பார்வையிட்டு ேபாலீசார் விசாரணை நடத்தினர்.

திருமண நிதி உதவி விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் தலைவாசலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்