ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் வருகிற 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

Update: 2019-12-11 23:00 GMT
குலசேகரம்,

மார்த்தாண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் காரணமாக வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் கீழே பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்படவில்லை. எனவே உடனடியாக சர்வீஸ் சாலை விரிவாக்கம் செய்யப்படாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

மேலும் மாவட்ட அளவில் பெரும் போராட்டங்களை நடத்துவோம். ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய அளவில் ஒட்டுமொத்த வணிகமும் பாதிக்கப்பட்டு வியாபாரம் சீர்குலைந்து வருகிறது.

17-ந் தேதி ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் வர்த்தகத்தால் தற்போது 37 சதவீதம் வரை சிறுவணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என நினைக்கக்கூடாது, ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகம் முடங்கி கடைகள் மூடப்பட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழில் வரியும், அரசுக்கு விற்பனை வரியும் கிடைக்காத சூழல் ஏற்பட்டு, அரசாங்கம் திவாலாகக் கூடிய நிலை ஏற்படும். எனவே ஆன் லைன் வர்த்தகத்தை கண்டித்து வருகிற 17-ந் தேதி மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மேலும் அதிகரித்தால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்துவோம். ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் ஈடுபடும் நடிகர் விஜய் சேதுபதி தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டம்

முன்னதாக குலசேகரம் வணிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற குமரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கோபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்றார். மாவட்ட செயலாளர் ரவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்