சேலத்தில், வாகன சோதனையில் ரசீது மாற்றி கொடுத்த புகார்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

சேலத்தில் வாகன சோதனையின் போது ரசீது மாற்றி கொடுத்த புகாரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-12-12 23:00 GMT
சேலம், 

சேலம் முள்ளுவாடி கேட் அருகே போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக குகை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாததால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்தார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை பெற்றபின்பு, தினேஷிடம் கொடுத்த ரசீதில் பணம் செலுத்தாததுபோல் கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அவர் ஏன்? இவ்வாறு ரசீது வழங்கினீர்கள் என சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிடம் கேள்வி கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு புகார் சென்றது. இதுதொடர்பாக விசாரணை நடத்த துணை போலீஸ் கமிஷனர் செந்திலுக்கு, கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் விசாரணை நடத்தி கமிஷனரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தை போல் மற்ற போக்குவரத்து போலீசார் யாராவது முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார்களா? எனவும், அபராத தொகையை அதிகமாக வசூலித்துவிட்டு குறைவான தொகையை பதிவு செய்து இருக்கிறார்களா? என்பது குறித்தும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்