தமிழகத்தில் நடப்பு சம்பா பருவத்தில், 15 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி - வேளாண்மை துறை இயக்குனர் பேட்டி

தமிழகத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 15 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

Update: 2019-12-12 22:00 GMT
கள்ளக்குறிச்சி, 

தமிழக வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமுர்த்தி நேற்று கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தென்கீரனூர் கிராமத்தில் கணேசன் என்பவருடைய வயலில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து செடிகளை பார்வையிட்டு நோய் தாக்குதல் உள்ளதா? என ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து தச்சுரில் உள்ள அறிவழகன் என்பவருடைய வயலில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர், மக்காச்சோளப்பயிர்களை பார்வையிட்டு நோய் தாக்குதல் உள்ளதா? எனவும் வளர்ச்சி நன்றாக உள்ளதா? எனவும் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் மாடூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை ஆய்வு செய்தார். இதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாயிகள் அதிகமாக நெல் சாகுபடி செய்துள்ளனர். நடப்பு சம்பா பருவத்தில் 15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிரானது நன்றாக வளர்ந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் நோய் தாக்கியிருந்தது. தற்போது அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நெற்பயிர்கள் அதிகமாக பயிரிடப்பட்டு நல்ல நிலையில் வளர்ந்துள்ளது. மேலும் இந்த மாவட்டங் களில் நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் உள்ளதா? என வயல்களுக்கு சென்று ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு இங்குள்ள வேளாண்மை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதேப்போல் வழக்கத்தை விட கூடுதலாக 1½ லட்சம் ஹெக்டேரில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு தேவையான யூரியா மற்றும் உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே1.5 லட்சம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. இப்போது கூடுதலாக 1.10 லட்சம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான யூரியா இருப்பு வைக்கப்படும். மக்காச்சோளப்பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராமசாமி, துணை இயக்குனர் கருணாநிதி, உதவி இயக்குனர்கள் சுரே‌‌ஷ்(தரக்கட்டுப்பாடு), தேவி, அன்பழகன், சந்துரு மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்