சுற்றுலா பயணிகள் குவிந்தனர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரி விழாக்கோலம் பூண்டு இருந்தது. வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்ததனர்.

Update: 2019-12-31 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரிக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சனி, ஞாயிறு மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வந்து குவிவது வழக்கம். ஆண்டு தோறும் புத்தாண்டு கொண்டாட்டங்களும் சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர்.

இதனால் ஓட்டல், விடுதிகள் நிரம்பி வழிகின்றன. சாதாரண விடுதிகளில் கூட அறைகள் காலியாக இல்லை. புத்தாண்டை கொண்டாட நேற்று இரவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இறங்கினர். இதையொட்டி போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காக கடற்கரைக்கு வரும் சாலைகளில் மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன் வழியாக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். கடலுக்குள் சென்று விடாமல் இருப்பதற்காக கடற்கரை சாலையில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையும் மீறி கடல் பகுதிக்கு செல்வோர் குளிக்க வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கிகளில் அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தனர்.

மின் விளக்கு அலங்காரம்

இதுதவிர கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும், ஆள் இல்லா விமானங்கள் மூலமாகவும் போலீசார் கண்காணித்தனர். நகை, பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியபடி இருந்தனர். கடற்கரை சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரம் நெரிசலில் சிக்கியதை சமாளிக்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்தப்பட்டது. வாகனங்களை நிறுத்துவதற்கு ஆங்காங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

பல ஓட்டல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுலா துறை சார்பில் நாட்டுப்புற நாடகம், சிலம்பாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடற்கரை சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் ஆன தோரணங்கள் கட்டப்பட்டு இரவில் ஜொலித்தன. ஓட்டல்கள் மற்றும் முக்கிய அரசு கட்டிடங்களிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டு இருந்தது.

கடற்கரையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தனித்தனியாக ஆய்வு நடத்தினார்கள். அப்போது அவர்கள் அங்கிருந்த பொதுமக்களுக்கு தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த ஆய்வின்போது போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

தூய இருதய ஆண்டவர் பேராலயம், ஜென்மராக்கினி ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், வில்லியனுர் மாதா கோவில் உள்ளிட்ட முக்கியமான தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் தேவாலயங்கள், கடற்கரை பகுதியில் திரண்டு இருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்த இடங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இளைஞர்கள் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தபடி சென்றனர்.

மேலும் செய்திகள்