திருக்கோவிலூரில், ஏட்டு வீட்டில் நகைகள் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருக்கோவிலூரில் ஏட்டு வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-01-01 22:15 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் வசித்து வருபவர் சுப்பு என்கிற சிவசுப்பிரமணியன்(வயது 40). இவர் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவில் ஏட்டாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டார். இவருடைய மனைவி தனது குழந்தைகளுடன், வீட்டை பூட்டிவிட்டு உளுந்தூர்பேட்டை பாலியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் பணி முடிந்து சிவசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் இருந்த பீரோவை சோதனை செய்து பார்த்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன், ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் ஏட்டு வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருக்கோவிலூரில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்