வேலூர், மாணவிகள் உள்பட 3 பேர் கடலில் மூழ்கி பலி

திருப்பதியைச் சேர்ந்த மாணவிகள் உள்பட 3 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். உயிர் பிழைத்தவர், தன்னை ஏழுமலையான் காப்பாற்றி விட்டதாக, தெரிவித்தார்.

Update: 2020-01-02 22:00 GMT
திருமலை, 

திருப்பதி லீலா மகால் அருகில் வசிப்பவர்கள் தேராங்குல ராதாகிருஷ்ணா. இவருடைய மகள் தேராங்குல சோனியா (வயது 21). இவர் திருப்பதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய உறவினர் ரகுவின் மகள் பத்தில சோனியா, திருப்பதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். திருப்பதி சத்தியநாராயணபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்டோ டிரைவர் மது (23), சந்திரசேகர்.

4 பேரும் ஆங்கில புத்தாண்டையொட்டி கடலில் குளிப்பதற்காக டிசம்பர் மாதம் 31–ந்தேதி இரவு 7.30 மணியளவில் திருப்பதியில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு நெல்லூர் மாவட்டம் சூப்பிபாளையம் கடற்காரைக்குச் சென்றனர். அன்று இரவே 4 பேரும் கடலில் குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்தனர். இரவு 11 மணியளவில் அவர்கள் மீண்டும் கடற்கரைக்குச் சென்றனர். அவர்களை போலீசார் மீண்டும் தடுத்தனர்.

இரு முறை குளிக்காமல் திரும்பி வந்த அவர்கள், ஆங்கில புத்தாண்டு அன்று காலை 6 மணியளவில் கடலில் குளிக்கச் சென்றனர். அப்போது கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றபோது, 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர். அவர்கள் தத்தளித்ததைப் பார்த்த மீனவர்கள் விரைந்து வந்து சந்திரசேகரை மட்டும் உயிருடன் மீட்டனர். 3 பேரை மீட்க முடியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்தனர்.

திருப்பதிக்கு வந்த சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில், ஆங்கில புத்தாண்டு என்று நாங்கள் 4 பேரும் திருமலைக்குச் செல்லலாம் என நினைத்தோம். பின்னர் கடலில் குளிக்க நெல்லூர் சென்றோம். அங்கு கடலில் குளித்தபோது, அலை இழுத்துச் சென்றதால் 3 பேரும் இறந்து விட்டனர். தன்னை ஏழுமலையான் காப்பாற்றி விட்டார், என்றார்.

மேலும் செய்திகள்