திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்: விடிய, விடிய வாக்கு எண்ணிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று விடிய, விடிய நடந்தது.

Update: 2020-01-02 22:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 27-ந்தேதி, 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 292 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 2 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. 1 ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதில் 490 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 11 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 1802 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், 254 ஊராட்சி தலைவர்கள், 170 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 2 ஆயிரத்து 243 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 999 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 88 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2-வது கட்ட தேர்தலில் 1247 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 953 பேர் போட்டியிட்டனர்.

2 கட்டமாக தேர்தல் முடிந்ததை தொடர்ந்து பதிவான ஓட்டுகள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூர் மாவட்டத்தில் 13 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஓட்டு எண்ணும் மையங்களில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்கு எண்ணிக்கையின் போது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்களின் விவரம் முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஊராட்சி தலைவர்களுக்கும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கும், மாவட்ட கவுன்சிலர்களுக்கும் தேர்தல் வெற்றி விவரம் அறிவிக்கப்பட்டது. விடிய, விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்