யானைகளை விரட்டுவதில் மெத்தனம் காட்டுவதாக கூறி வனத்துறை ஊழியரை தாக்கிய பொதுமக்கள்

காட்டு யானைகளை விரட்டுவதில் மெத்தனம் காட்டுவதாக கூறி வனத்துறை ஊழியரை பொதுமக்கள் தாக்கினர். மேலும், வனத்துறை வாகனத்தையும் அடித்து நொறுக்கினர்.

Update: 2020-01-04 23:00 GMT
ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு அல்லது கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் காட்டு யானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் மெத்தனம் காட்டுவதாக கூறி கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

வனத்துறை ஊழியர் மீது தாக்குதல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து சானமாவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தை அடித்து நொறுக்கினர். மேலும், பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் ராகுல் (வயது 24) என்பவரை பொதுமக்கள் சிலர் தாக்கியதாக தெரிகிறது.

இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் ஆஸ்பத்திரிக்கு சென்று ராகுலிடம் விசாரித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்