வைகை ஆற்றில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

திருப்புவனம் வைகைஆற்றில் காடுகள் போல் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-01-04 22:15 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் வைகை ஆற்றில் முளைத்துள்ள கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் வைகை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர் நீதிமன்ற கிளையும் உத்தரவிட்டது. அதன் பேரில் சில இடங்களில் காணப்பட்ட கருவேல மரங்கள் அகற்றப்பட்டு பல இடங்களில் அகற்றாமல் விட்டதால் தற்போது அவை அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது வைகைஅணை நிரம்பினால் மட்டுமே வைகைஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

அதனையும் இந்த பகுதியில் உள்ள கருவேல மரங்கள் அதிகமாக உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பாதிப்பு ஏற்படுவதால் கோடைக்காலங்களில் சில இடங்களில் குடிதண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதியடையும் நிலை உருவாகி உள்ளது. கடந்த மாதம் வைகை ஆற்றில் 15 ஆடுகள் இழுத்து வரப்பட்டு கருவேல மரங்களின் முட்களில் சிக்கிக்கொண்டது.

இதையடுத்து அந்த ஆடுகளை மீட்பதில் கால தாமதம் ஏற்பட்டது. 15 ஆடுகளில் 11 ஆடுகள் மட்டும் மீட்கப்பட்டன. இந்த பகுதி வைகை ஆற்றில் கருவேல மரங்கள் ஆங்காங்கே காடுகள் போல் காட்சியளித்து வருகிறது. தண்ணீர் வராத நேரங்களில் இந்த கருவேல மரங்களின் நிழலில் மர்ம நபர்கள் சிலர் சமூக விரோத செயல்களை செய்து வருகின்றனர். வைகை ஆற்றை முழுவதுமாக கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. 

இதனால் இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்