போடியில் நடந்த ஏலத்தில், வரலாறு காணாத உச்சத்தை தொட்ட ஏலக்காய் விலை - கிலோ ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனை

போடியில் நடைபெற்ற ஏலத்தில் வரலாறு காணாத உச்சத்தை ஏலக்காய் விலை தொட்டது. அதன்படி ஒரு கிலோ ஏலக்காய் ரூ.7 ஆயிரம் வரை விலை போனது.

Update: 2020-01-05 22:15 GMT
போடி, 

தேனி மாவட்டம் போடியில் கடந்த சில மாதங்களாகவே ஏலக்காய் விலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனை ஆன ஏலக்காய் படிப்படியாக விலை குறைந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிலோ ரூ.2 ஆயிரத்து 500 வரை விற்பனை ஆகி வந்தது. இதற்கிடையே விளைச்சலும் அதிகரித்ததால் ஏலக்காய் விலை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்தது. மேலும் ஏலக்காய்க்கு ஓரளவு விலை கிடைத்ததால் விவசாயிகள் குறிப்பிட்ட மகசூலை எடுத்துவிட்டனர்.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஏலக்காய் வரத்து குறைந்தது. இதனால் அவற்றின் விலை படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த மாதம் போடியில் நடந்த ஏலக்காய் ஏலத்தில், ஒரு கிலோ ஏலக்காய் ரூ.3 ஆயிரத்து 863 வரை விற்பனையானது.

இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் நடத்திய ஏலத்திலும் ஏலக்காய் விலை ரூ.3 ஆயிரத்து 800 வரை விற்பனை ஆனது. இந்தநிலையில் நேற்று முன்தினம் போடியில் உள்ள மத்திய அரசின் நறுமண பொருட்கள் வாரிய மையத்தில் நடந்த ஏலத்தில் 288 மூட்டைகளில் 61 ஆயிரத்து 775 கிலோ ஏலக்காய் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டது. இதில் ஏலக்காயின் உருவ அளவின் அடிப்படையில் அதிகபட்ச விலையாக கிலோ ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் சராசரி விலை ரூ.4 ஆயிரத்து 15 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதுவரை ஏலக்காய் கிலோ ரூ.5 ஆயிரத்திற்கு குறைவாகவே விற்பனையாகி வந்தது. தற்போது கிலோ ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. ஏலக்காய் ஏல வரலாற்றில் ரூ.7 ஆயிரம் என விலை உச்சத்தை தொட்டது, இதுவே முதல் முறை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்