கட்சியினருடன் செல்ல மறுத்த தி.மு.க. பெண் கவுன்சிலரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயற்சி - சின்னமனூரில் பரபரப்பு

சின்னமனூரில் பதவியேற்பு விழா முடிந்தவுடன் கட்சியினருடன் செல்ல மறுத்த தி.மு.க. பெண் கவுன்சிலரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-06 22:30 GMT
சின்னமனூர்,

தேனி மாவட்டத்தில் 8 ஒன்றியங்கள் உள்ளன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவில் ஆண்டிப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய 3 ஒன்றியங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. தேனி, சின்னமனூர் ஆகிய 2 ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. போடி, பெரியகுளம், கடமலை-மயிலை ஆகிய 3 ஒன்றியங்களை கைப்பற்ற போவது யார்? என்பதில் இழுபறி உள்ளது. இதற்கிடையே நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.

அதன்படி சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 10 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 6 இடங்களை தி.மு.க.வும், 4 இடங்களை அ.தி.மு.க.வும் பிடித்தது. இதையடுத்து சின்னமனூர் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் 10 வார்டு கவுன்சிலர்களும் கலந்துகொண்டு பதவியேற்று ெகாண்டனர்.

இந்தநிலையில் பதவியேற்பு விழா முடிந்தவுடன் தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் ஒரே காரில் செல்ல முடிவு செய்திருந்தனர். அதன்படி தி.மு.க. கவுன்சிலர்கள், ஒன்றிய அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன் ஒரே காரில் ஏறினர். ஆனால் அவர்களில் 1-வது வார்டு கவுன்சிலரான ஜெயந்தி, தி.மு.க. கவுன்சிலர்களுடன் செல்ல மறுப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். இருப்பினும் அவர் ஏற மறுத்து, அங்கிருந்து செல்ல முயன்றார். இதனால் ெஜயந்தியின் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை பார்த்து அங்கு விரைந்தனர். அவர்கள் கவுன்சிலர் ஜெயந்தியை மீட்டு, போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவுன்சிலர் ஜெயந்தி, தி.மு.க.வினருடன் சென்றால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என தெரிவித்தார். அப்போது ஜெயந்தி, அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜெயந்தியை கட்சி ஏற்பாடு செய்துள்ள காரில் அனுப்பி வைக்குமாறு தெரிவித்தனர். இதனால் சின்னமனூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார், ஜெயந்தி வந்த வாகனத்திலேயே அவரை ஏற்றினர். பின்னர் பாதுகாப்புடன் ஜெயந்தியின் சொந்த ஊரான பொட்டிபுரத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயந்தியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்