விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் திமுக அரசு அலட்சியம்: அன்புமணி குற்றச்சாட்டு

கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு வழங்கப்பட்டதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2025-12-25 10:14 IST

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், நவம்பர் மாதம் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் அவற்றுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படாததைக் கண்டித்து கடந்த 23-ம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதைத் தொடர்ந்து மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு என்று வெளியான செய்திகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், செய்திகளைப் படித்துப் பார்த்த போது தான் கடந்த ஆண்டு நவம்பர், திசம்பர் மாதங்களிலும், நடப்பாண்டின் ஜனவரி மாதத்திலும் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குத் தான் ரூ.289.63 கோடி நிவாரணம் வழங்குவதற்கு இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவும் எப்போது வழங்கப்படும் என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் விஷயத்தில் திமுக அரசின் அலட்சியமும், துரோகமும் கண்டிக்கத்தக்கவை.

யானையின் வாயிலிருந்து தவறி விழும் ஓர் உருண்டை சோறு ஒரு கோடி எறும்புகளுக்கு உணவாகும் என்பார்கள். விவசாயிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நிதியுதவியும் கிட்டத்தட்ட இதைப் போன்றது தான். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது அரசின் செலவில் 1,369-ல் ஒரு பங்கு தான். ஆனால், ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்கும் இழப்பீட்டு தொகை என்பது உழவர்களின் ஒரு பருவ உழைப்புக்காக கிடைக்கும் பயன் ஆகும். இதை இவ்வளவு நாள் தாமதப்படுத்தி வழங்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

கடந்த ஆண்டு மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட போது ஏக்கருக்கு ரூ.6,800 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதுவே போதுமானதல்ல என்பதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், அறிவிக்கப்பட்டதை விட 25% குறைவாக ரூ.5,191 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதை தமிழ்நாட்டு விவசாயிகள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.

நடப்பாண்டில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்று வரை நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக இதுவரை மொத்தம் 5 முறை நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். ஆனாலும், நிவாரணம் வழங்க அரசு தயாராக இல்லை. அதனால், நடப்பாண்டிற்கான இழப்பீடு அடுத்த ஆண்டு தான் கிடைக்குமோ? என்ற ஐயம் உழவர்கள் மத்தியியில் ஏற்பட்டுள்ளது. அதை திமுக அரசு போக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் உழவர்கள் நலனுக்காக துரும்பைக்கூட அசைக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் உழவர்கள் நலன் மற்றும் வேளாண்மை தொடர்பாக மொத்தம் 56 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 48 வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இப்படியாக உழவர்களுக்கு எதையும் செய்யாத அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மட்டும் சுரண்டிக் கொள்கிறது. உலகிற்கே உணவு படைக்கும் கடவுளர்க்கு திமுக அரசு மீண்டும், மீண்டும் துரோகம் இழைப்பதற்கு வரும் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை தமிழக மக்கள் கற்பிக்கப் போவது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்