திமுக நல்ல சக்தியாக இருந்ததால்தான் மக்கள் நம்பி ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள்: அமைச்சர் முத்துசாமி
எந்த கட்சியும் 5 ஆண்டு காலத்தை முடிக்கும்போது சில சங்கடங்களை சந்திக்கும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.;
ஈரோடு,
ஈரோட்டில், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகம், எம்.ஜி.ஆரை கையில் எடுப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு யாரும் கையில் எடுக்க முடியாது. தி.மு.க. மீது எம்.ஜி.ஆர். எவ்வளவு பற்று வைத்திருந்தார் என கருணாநிதி உள்பட அனைவரும் அறிவார்கள். விஜய் பேசியது குறித்து மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டியது. இந்த முடிவை யாரும் தனியாக எடுத்துவிட முடியாது. தி.மு.க. நல்ல சக்தியாக இருந்ததால் தான் இவ்வளவு காலமாக மக்கள் நம்பி ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள்.
எந்த கட்சியும் 5 ஆண்டு காலத்தை முடிக்கும்போது சில சங்கடங்களை சந்திக்கும். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் நாள் எப்படி வரவேற்பு இருந்ததோ அதைவிட தற்போது கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு காரணம் இந்த கட்சியை, ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2026-ம் ஆண்டு தேர்தலிலும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை கொண்டு வர வேண்டும் என மக்கள் தயாராக உள்ளனர்.
தி.மு.க.வுக்கு அதிகளவில் இளைஞர்கள் வந்தால் மூத்த நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணத்தை, இந்த ஆட்சி அமைந்த முதல் நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அது தேர்தலுக்காக செய்யப்பட்டதல்ல. அதுபோல் நடப்பு பொங்கல் பண்டிகைக்கும் ரேஷன்கடைகள் மூலம் பணம் வழங்குவது என்ற முடிவை அரசு எடுத்தால் அது தேர்தலுக்கானதல்ல. ஏதாவது ஒரு காரணத்தை கூறாமல், மக்கள் நன்மைக்காக செய்யப்படுவதாக பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.