மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-01-06 23:02 GMT
மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் 63-வது தலமாகும். இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. முன்னதாக வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில் முகப்பு மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, அதன் வழியாக வருகை தந்து முகப்பு மண்டபத்தில் அலங்கார திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்த தலசயன பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.

விழாவில் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் என்.ஜனார்த்தனம், மூத்த அர்ச்சகர் அனந்தசயனபட்டாச்சாரியர், முன்னாள் கவுன்சிலர் பெ.பூங்குழலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர், மேலாளர் சந்தானம் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகாரசாமி கோவில் ராமானுஜர் அவதார தலம் என்பதால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் என்று தனியாக பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக நித்ய சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகாரசாமிக்கு நித்ய ஆராதனைகள் நடைபெற்றது. மணிக்கதவு வழியாக உள்புறப்பாடு நடைபெற்று பின்னர் தங்கமண்டபத்தில் உற்சவர் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகாரசாமி ஆகியோர் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆதிகேசவபெருமாள் மற்றும் ராமானுஜரை வணங்கினர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகாரசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு 10 நாட்கள் பகல்பத்து நிகழ்ச்சியும், வைகுண்ட ஏகாதசிக்கு பின்பு ராப்பத்து நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூரில் 108 வைணவ தலங்களில் 52-வது தலமாக விளங்கும் பக்தவச்சல பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதிகாலை முதல் மாலை வரை சென்னை, வேலூர், காஞ்சீபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மீஞ்சூரை அடுத்த வடஸ்ரீரங்கம் என்னும் தேவதானம் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரங்கநாதர் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்