டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-07 22:30 GMT
நாகர்கோவில்,

டெல்லி ஜவகர்லால் நேரு மத்திய பல்கலைக்கழகத்தின் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவ, மாணவிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தினர். கடந்த 5-ந் தேதியன்று இரவு அங்குள்ள ஆசிரியர் சங்கம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு கும்பல் அங்கிருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்ைத கண்டித்து நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வகுப்புகளை புறக்கணித்தனர். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் திரண்டு அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

மாணவர்களின் இந்த உள்ளிருப்பு போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்