மத்திய அரசிடம் தெரிவித்து, நீட் தேர்வில் விலக்கு பெறுவது தமிழக அரசின் கடமை - கி.வீரமணி பேச்சு

மத்திய அரசிடம் தெரிவித்து நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டியது தமிழக அரசின் கடமை என்று திருப்பூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

Update: 2020-01-09 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சுப்பராயன் எம்.பி.க்கு பாராட்டு விழா நேற்று இரவு ராயபுரத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.

கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சியின் ஒருமித்த ஆதரவோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசிடம் தைரியத்தோடு தெரிவித்து விலக்கு பெற வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் அதை விட்டு விட்டு எதிர்க்கட்சிகள் மீது குறை கூறுவது நியாயமல்ல. நீட் தேர்வு நடைமுறையில் ஊழல் அதிகம் நடைபெற்றுள்ளது. ஆள்மாறாட்டம் அதிகம் நடக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விட்டது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து, இந்தியாவின் பொருளாதார சரிவை பா.ஜனதா அரசு திசை திருப்புகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள். மதத்தால் மனிதனை பிரிக்க முயற்சிக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத், இந்தியா இந்து நாடு என்கிறார். இந்து என்ற சொல் ராமாயணம், மனுதர்மம், கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை சொல்ல வேண்டும். டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் முககவசம் அணிந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்து அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. இதுவரை தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்யவில்லை. டெல்லியில்மத்திய அரசின் கட்டுப்பாட்டில் போலீஸ் உள்ளது.

நாடு வளர்ச்சி பெற, சாதி ஒழிய, மதவெறி நீங்க, மனிதம் வளர்ச்சி பெற பெரியார் கருத்துகள் பரவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருப்பூர் சுப்பராயன் எம்.பி.க்கு சால்வை அணிவித்து கி.வீரமணி பாராட்டினார். பின்னர் சுப்பராயன் எம்.பி. ஏற்புரையாற்றினார். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்