விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த பல கட்சி நிர்வாகிகள்
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.;
சென்னை,
நடிகர் விஜய்யின் தவெகவில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்தார். இந்த நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 25 முக்கிய நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் அக்கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
இதில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சுந்தர பாண்டியன், ஒட்டன்சத்திரம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம், நடிகை ரஞ்சனா நாச்சியார், இயக்குனர் ஜெகதீச பாண்டியன், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தவெகவில் இணைந்துள்ளனர்.
ரஞ்சனா நாச்சியார் தமிழக பாஜக கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.