200-க்கும் மேற்பட்டோர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி; திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

200-க்கும் மேற்பட்டோர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-01-10 22:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பம், திடீர் நகர் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் ஆற்காடு குப்பம் திடீர் நகர் பகுதியில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு எங்கள் பகுதிக்கு வந்தவர்கள் மாதம்தோறும் ரூ.100, ரூ.500, ரூ.1000, ரூ.1500 என சிறுக சிறுக செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தால் 3 ஆண்டுகளில் அதிக லாபத்துடன் பணம் தரப்படும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் அந்த திட்டத்தில் சேர்ந்து மாதம்தோறும் தவறாமல் பணம் செலுத்தி வந்தோம். தற்போது எங்களுக்கு இந்த திட்டம் முடிவடையும் தருவாயில் முகவராக செயல்பட்ட ஆற்காடு குப்பத்தை சேர்ந்த தனலட்சுமி மற்றும் மலர்கொடி ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் எங்களிடம் இருந்த காப்பீடு பத்திரத்தை கொடுத்தால் அதன் மூலம் பணம் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் எங்களிடம் இருந்த பத்திரத்தை கொடுத்தோம்.

பணம் தருவதாக தெரிவித்த அவர்கள் இதுநாள் வரையிலும் பணம் தராமல் மோசடியில் ஈடுபட்டனர். இவ்வாறாக அவர்கள் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்து எங்களை ஏமாற்றி உள்ளனர். எனவே எங்களை ஏமாற்றி மோசடி செய்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன், தொகுதி செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் இதுதொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் அளித்தார்கள். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்