விபத்தில் இறந்த என்ஜினீயரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி

விபத்தில் இறந்த என்ஜினீயரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-01-10 22:30 GMT
நாமக்கல், 

சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் சதீஸ் (வயது 24). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி மதுரையில் இருந்து சேலத்திற்கு, சேலம் கோட்ட அரசு பஸ்சில் வந்தார். பஸ் நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் சதீஸ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சதீசின் தாயார் அன்னலட்சுமி, இழப்பீடு கேட்டு நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கணபதி மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி கடந்த 2018-ந் தேதி ஜூன் மாதம் 5-ந் தேதி சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட சதீசின் குடும்பத்திருக்கு ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தர விட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதையடுத்து இழப்பீட்டு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் வழங்க கோரி அன்னலட்சுமி தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தற்போதைய மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி, சேலம் கோட்டத்துக்கு சொந்தமான 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று கோர்ட்டு அமீனா முன்னிலையில் நாமக்கல்லில் நின்றிருந்த 2 அரசு டவுன் பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாமக்கல் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்