புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி

புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற மாணவி பலியானார். மேலும் 20 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2020-01-10 23:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கநாதன். இவரது 2-வது மகள் ரம்யா(வயது 13). மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் கடந்த 5-ந் தேதி புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவளது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் ரம்யாவுக்கு மூளைக்காய்ச்சல் மற்றும் டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரம்யா உயிரிழந்தார். மாணவியை பறிகொடுத்த அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

மாணவி ரம்யா வசித்து வந்த கணேஷ் நகர் பகுதியில் மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு சார்பில் அங்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வாசுதேவனிடம் கேட்ட போது, ‘புதுவை மற்றும் தமிழக பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவி ரம்யா டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

புதுவை அரசு மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறியுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்