போலீஸ் அதிகாரி கொலைக்கு கண்டனம்: இந்து அமைப்பினர் அமைதி ஊர்வலம்

குமரி போலீஸ் அதிகாரி கொலைக்கு கண்டனம் தெரிவித்து களியக்காவிளையில் இந்து அமைப்பு சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

Update: 2020-01-10 23:00 GMT
களியக்காவிளை,

களியக்காவிளை சந்தைரோடு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை பயங்கரவாதிகள் சுட்டும், வெட்டுக்கத்தியால் வெட்டியும் கொன்றனர்.

இந்த பயங்கர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. தலைமறைவான பயங்கரவாதிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து களியக்காவிளையில் இந்து அமைப்புகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

வில்சனை கொன்ற பயங்கரவாதிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஊர்வலம் நடந்தது.

படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம் களியக்காவிளை பஸ் நிலையம் வரை சென்றது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு கொடியை ஏந்தி சென்றனர். இதனையடுத்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை தாங்கினார். விசுவ இந்து பரிஷத் மாநில துணை தலைவர் காளியப்பன், பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவர் அரசு ராஜா, பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் குழிச்சல் செல்லன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மீனாதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்து அமைப்பினர் அமைதி ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி களியக்காவிளை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்