பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

Update: 2020-02-29 22:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமக பெருந்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வரபூஜை மற்றும் வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. நேற்று அதன் கொடி ஏற்ற நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கொடிக்கு சிறப்பு பூஜையும், ஆனந்தவல்லி, சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். கொடி ஏற்ற விழாவில் கோவில் ஸ்தானிகர் நாராயணஅய்யர், கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர், பிராமணர் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி, ஜோதிடவியல் மற்றும் வாஸ்துநிபுணர் ஸ்ரீராமன்ஆதித்யா, இன்சூரன்ஸ் அதிகாரி விஸ்வேஸ்ரய்யா, கோவில் முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், ஆன்மிக பேச்சாளர் கேசவராஜசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிம்மவாகனத்திலும், நாளை (திங்கட்கிழமை) சே‌‌ஷவாகனத்திலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை)சூரியபிரபை வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது. தொடர்ந்து வருகிற 4-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 5-ந் தேதி யானைவாகனத்திலும், 6-ந் தேதி மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும், பின்னர் பு‌‌ஷ்பகவிமானத்தில் சுவாமி புறப்பாடும் மற்றும் 7-ந்தேதி கைலாச வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளது.

முக்கிய திருவிழாவான தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது. 9-ந் தேதி கொடி இறக்கமும், தீர்த்தவாரியும், 10-ந் தேதி ரி‌‌ஷபவாகனத்தில் சுவாமி வீதிஉலாவும், 11-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 12-ந் தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு அடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை அரியலூர் உதவி ஆணையர் மற்றும் தக்கார் கருணாநிதி, கோவில் நிர்வாக அலுவலர் மணி மற்றும் கோவில் திருப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்