பதிவுத்துறையில் சேவைக் கட்டணம் உயர்வு - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்த்தியது அனைத்து மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

Update: 2024-05-08 13:30 GMT

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்த்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு என்று எல்லா விதமான கட்டண உயர்வுகள் இருக்கும்போது, முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்த்தியது அனைத்து மக்களையும் இன்று அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஆட்சி செய்த மூன்று ஆண்டுகளிலேயே மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், என்று சொல்லும் முதல்வர், களத்தில் இறங்கி மக்களிடம் பேசினால் மட்டுமே உண்மை நிலவரம் என்னவென்று தெரிய வரும். தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எல்லா விதமான கட்டண உயர்வுகளை ஏற்படுத்தி, மக்களுக்கு வரிகள் மூலம் வலிகளை ஏற்படுத்தி இருக்கிறார்களே தவிர, யார் முகத்திலும் எந்த ஒரு மகிழ்ச்சியையும் காண முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஒவ்வொருவரின் வருமானத்திற்கு ஏற்றவாறு வரிகளை நியமிக்க வேண்டுமே தவிர, அவர்களிடம் பணத்தை வசூலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேமுதிக சார்பில் இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் கட்டண உயர்வுகளை அரசு மறு பரிசீலனை செய்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்