விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்: 673 பேருக்கு பணி நியமன ஆணை - கலெக்டர் வழங்கினார்

விழுப்புரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 673 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

Update: 2020-03-01 22:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 63 முன்னணி தனியார் நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு 3,187 பேரிடம் நேர்காணல் நடத்தி, 673 பேரை தேர்வு செய்தனர். இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை பணி நியமன ஆணையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் ஒருங்கிணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.

அதன்அடிப்படையில் விழுப்புரத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 673 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 289 பேர் முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு சென்று உள்ளனர். எனவே இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

இதில் விழுப்புரம் மண்டல இணை இயக்குனர் அலுவலர் சந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் பாலமுருகன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ஈஸ்வரன், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்