பெண்ணிடம் ரூ.12½ லட்சம் மோசடி: மனைவியுடன் விழுப்புரம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைது

ஏலச்சீட்டு நடத்தி பெண்ணிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்ததாக விழுப்புரத்தை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-03-02 22:15 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தமிழ்குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 44). இவர் விழுப்புரம் மாவட்டம் முகையூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் உரிய அனுமதி பெறாமல் வீட்டிலேயே மனைவி சரளாதேவியுடன் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவர்களிடம் கடலூர் வைடபாக்கம் வர்மாவீதியை சேர்ந்த மோகன்தாஸ் மனைவி சுந்தராம்பாள் (58) கடந்த 15.7.2014 முதல் 25.1.2019 வரை ஏலச்சீட்டில் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் செலுத்தினார். மேலும் நாகப்பனும், சரளாதேவியும் வற்புறுத்தி கேட்டதால் கடனாக ரூ.8 லட்சத்தையும் சுந்தராம்பாள் கொடுத்தார்.

ஆனால் அதன்பிறகு ஏலச்சீட்டு பணத்தையும், கடனாக பெற்ற பணத்தையும் கணவன், மனைவி 2 பேரும் திருப்பி கொடுக்கவில்லை. இது பற்றி சுந்தராம்பாள் கேட்டதற்கு அவரை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. இது பற்றி அவர் கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஏட்டுகள் பவானி, சாந்தகுமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரளாதேவி(34), நாகப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

உரிய அனுமதியின்றி ஏலச்சீட்டு நடத்தும் நபர்களிடம் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் என்றும், யாராவது அனுமதியின்றி ஏலச்சீட்டு நடத்தினால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்