திருச்சியில் பயங்கரம் காவலாளி தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொல்ல முயற்சி மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சியில் காவலாளி தலையில் கல்லை தூக்கிப்போட்டு மர்மநபர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-03-03 22:30 GMT
திருச்சி,

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பகுதியில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தில் காவலாளியாக பொன்மலையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை செந்தில்குமார், அந்த வணிக வளாகத்தில் முதல் தளத்தில் லிப்ட் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், செந்தில்குமாரை கொலை செய்யும் நோக்கில் அவரது தலையில் கல்லை தூக்கிப்போட்டார். இதில் படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார். அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.500-ஐ கொள்ளையடித்து விட்டு மர்மநபர் தப்பிச்சென்றுவிட்டார்.

கண்காணிப்பு கேமரா

படுகாயமடைந்த செந்தில்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவலாளியை கொலை செய்ய முயன்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். இதில் மர்ம நபர் வணிக வளாகத்தின் வெளிப்பகுதியில் இருந்து கல்லை எடுத்து வருவதும், காவலாளி தலையில் 4 முறை கல்லை தூக்கி பயங்கரமாக போட்டதும் பதிவாகி இருந்தது. அவர் திருடுவதற்காக வந்தபோது காவலாளி இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்யும் நோக்கில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பந்தப்பட்ட மர்மநபர் குற்ற வழக்கில் தொடர்புடையவர் போல இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கேமராவில் பதிவான மர்மநபரின் உருவத்தை வைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். காவலாளி தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்