அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிட திறப்பு விழா: கரூர் வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறக்க கரூருக்கு இன்று வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-03-04 23:30 GMT
கரூர்,

கரூர் காந்திகிராமத்தில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது முதலாம் ஆண்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.155½ கோடி மதிப்பிலான புதிய கட்டிட பணிகள் முடிந்து தயார் நிலையில் இருக்கின்றன. அதன் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க உள்ளார்.

முதல்-அமைச்சருக்கு, கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அதன் செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் மதியம் 12.30 மணியளவில் கரூர் காந்தி கிராம அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் வருகை தந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

போலீசார் சோதனை

அங்கு நிகழ்ச்சி முடிவடைந்ததும் காரில், தாந்தோணிமலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி மதிய உணவு அருந்தி ஓய்வெடுக்கிறார். பின்னர் மதியம் 3 மணியளவில் காரில் அங்கிருந்து புறப்பட்டு திருச்சிக்கு முதல்-அமைச்சர் செல்கிறார். முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக அமராவதி பாலம், பசுபதிபாளையம் பாலம், தாந்தோணிமெயின்ரோடு, கோவை ரோடு, மனோகரா கார்னரில் அ.தி.மு.க. கொடி-தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்