போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள்: 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேலம் கோர்ட்டில் மனு

போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேலம் கோர்ட்டில் மனு கொடுத்தனர்.

Update: 2020-03-06 00:00 GMT
சேலம்,

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் அமைத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்தநிலையில் கடந்த ஆண்டு சேலம் புதிய பஸ்நிலையம் அருகே அரசு பொருட்காட்சி திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் சிலர் மனு கொடுக்க வந்தனர்.அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து விவசாயிகள் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து விவசாயிகள் மீது பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

விவசாயிகள் ஊர்வலம்

இதனிடையே நேற்று சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் திரண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து இருந்தனர். அதில், விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்தும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கோர்ட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், அவர்களை அனுமதியின்றி ஊர்வலமாக செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் பதாகைகளை தவிர்த்து விட்டு கோர்ட்டுக்கு ஊர்வலமாக சென்று 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவை மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். மேலும் இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதிக்கு தள்ளி வைத்ததுடன், அன்று போலீசார் பதில் மனுதாக்கல் செய்ய மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

நடவடிக்கை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்களது நிலத்தை மட்டுமே நம்பி உள்ளோம். 8 வழிச்சாலை என்னும் பெயரில் எங்கள் நிலங்களை அரசு பறிக்க நினைக்கிறது. இதற்கு துணைபோகும் வகையில் போலீசார் எங்கள் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகளை போட்டு மிரட்ட நினைக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பள்ளப்பட்டி போலீசார் எங்கள் மீது வழக்கு போட்டுள்ளனர்.ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காமல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்