குடிநீர் வழங்க கோரி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை போராட்டம் - கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், குடிநீர் வழங்க கோரி கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2020-03-06 20:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 51-வது வார்டு ஊரணி ஒத்தவீடு பகுதிகளை சேர்ந்த பெண்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், ஊரணி ஒத்தவீடு பகுதி மக்களுக்கு முன்பு முத்தையாபுரம் பஞ்சாயத்து மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

ஆகையால் மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையாளர் ஜெயசீலன், மேட்டுப்பட்டி, கரிகலம் பகுதி மக்களுக்கு வழங்கப்படுவது போல் மாநகராட்சி சார்பில் மாதம் ரூ.300 கட்டணத்தில் 5 வீடுகளுக்கு ஒரு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதன்பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்