ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் கைது

திருச்சியில் புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-06 22:15 GMT
திருச்சி, 

திருச்சி அரியமங்கலம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் புதிதாக வீடு வாங்கினார். இந்த வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்யவும், பெயர் மாற்றம் செய்யவும் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் செந்தில்குமார் விண்ணப்பித்தார். அப்போது அவரிடம் அரியமங்கலம் கோட்ட 7-வது வார்டு பில்-கலெக்டர் முருகன்(வயது 45), அலுவலக உதவியாளர் பிலிப்கென்னடி(27) ஆகியோர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, செந்தில்குமார் ரசாயனப்பொடி தடவிய லஞ்ச பணத்தை அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் வைத்து நேற்று மாலை பிலிப்கென்னடி மூலமாக முருகனிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகன், பிலிப்கென்னடி ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அந்த அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.31 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து முருகனிடமும், பிலிப்கென்னடியிடமும் பல மணிநேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்