சளி, இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் கலெக்டர் அறிவுரை

பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் கூறினார்.

Update: 2020-03-07 23:00 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர், மாவட்ட பூச்சியியல் வல்லுனர், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் முத்துச்செல்வன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன் ஆகியோர் முன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கை கழுவும் முறை பற்றியும், தொற்று நீக்கம் பற்றியும், அதனை எவ்வாறு பொதுமக்களின் விழிப்புணர்வுக்கு சென்றடையும் பொருட்டு விரிவாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

நோயின் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகளானது காய்ச்சல், இருமல், சளி, உடல்சோர்வு, ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். நோய் தடுப்பு நடவடிக்கைகளானது தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பினை உபயோகித்து நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இருமும்போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கினை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். இளநீர், ஓ.ஆர்.எஸ். கரைசல், கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருக வேண்டும்.

மேலும், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் ஆணையின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ அலுவலர்கள் 24 மணி நேர அவசர சிகிச்சை தனிப்பிரிவு ஆம்புலன்ஸ் வசதி மற்றும் ஆய்வக வசதி சிறப்பு நிலை கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

மருத்துவமனைக்கு ெசல்ல வேண்டும்

மேலும் பஸ், ஆம்புலன்ஸ், டாக்சி மற்றும் பஸ் நிலையங்கள், பஸ் டெப்போ, சிறுவர் பூங்கா, பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் தினந்தோறும் புகை மற்றும் தீவிர மருந்து தெளிப்பு பணிகளும், அலுவலகங்களில் அனைவருக்கும் அறிவுரைகளும் வழங்க வேண்டும். மாவட்டத்திலிருந்து மேற்படிப்பிற்காகவும், அறப்பணிக்காகவும் சீனாவிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 30 பேரை மருத்துவக்குழு தினந்தோறும் கண்காணித்து வருகின்றது. மேலும், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஹரிஹரன், மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்