கடல் உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க விவேகானந்தர் மண்டபத்தில் ரசாயன கலவை பூசும் பணி தீவிரம்

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க ரசாயன கலவை பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2020-03-07 23:30 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மன் சிவ பெருமானை வேண்டி ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்ததாக வரலாற்று கூறுகிறது. இதனால் அந்த பாறையில் அம்மனின் ஒற்றைக்கால் பாதம் இயற்கையாகவே பதிந்து இருந்தது. இந்த கால் பாதத்தைப் பார்த்து தியானம் செய்வதற்காக கொல்கத்தாவை சேர்ந்த சுவாமி விவேகானந்தர், 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி கன்னியாகுமரி வந்தார். அவர் கடல் நடுவில் அமைந்துள்ள அந்த பாறைக்கு தன்னந்தனியாக நீந்தி சென்று டிசம்பர் மாதம் 25, 26, 27 ஆகிய 3 தினங்கள் கால் பாதத்தைப் பார்த்து தியானம் செய்தார். பின்னர் அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு சென்று வீர உரையாற்றினார். அதன் பிறகு அவரது பெயரும் புகழும் உலகம் முழுவதும் பரவியது.

நினைவு மண்டபம்

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் தவம் இருந்ததை நினைவுகூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்ட விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1964-ம் ஆண்டு நினைவு மண்டபம் கட்டும் பணி தொடங்கியது. 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணி 1970-ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் இந்த மண்டபத்தை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

சீரமைப்பு பணி

இந்த மண்டபம் கடலின் நடுவில் அமைந்து உள்ளதால் கடல் உப்புக்காற்றினால் பாதிக்காமல் இருக்க அடிக்கடி ரசாயன கலவைகள் பூசப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ரூ.50 லட்சம் செலவில் ரசாயன கலவை பூசி சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு உள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் சீரமைப்பு பணி முடிவடைந்த நிலையில் தற்போது விவேகானந்தர் சிலை அமைந்துள்ள மெயின் மண்டபமான சபா மண்டபத்தில் பாலிஷ் போடுதல், சிமெண்ட் பாயிண்ட் வைத்தல் மற்றும் ரசாயன கலவை பூசுதல் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்