கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசிமகத் திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசிமகத் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-03-08 22:00 GMT
கழுகுமலை, 

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசிமகத் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசிமகத் திருவிழா 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற பழமைவாய்ந்த குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசிமகத் திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலசந்தி, திருவனந்தல் பூஜை நடைபெற்றது. காலையில் கழுகாசலமூர்த்தி–வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

பின்னர் கோவில் மேலவாசலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும், கிரிவலப்பாதை வழியாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். சில பக்தர்கள் 21 அடி நீளம் வரையிலான அலகு குத்தியும், சூரிய காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுவாமி வீதி உலா 

மதியம் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கழுகாசலமூர்த்தி–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீசுவரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்