நெல்லையில் ஆற்றில் குளிக்க சென்ற ஓய்வு பெற்ற உதவி கலெக்டரின் பணம், செல்போன் திருட்டு

நெல்லையில் ஆற்றில் குளிக்க சென்ற ஓய்வு பெற்ற உதவி கலெக்டரின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த பணம், செல்போனை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2020-03-09 22:30 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் நம்மையாழ்வார் பெருமாள் (வயது 65). ஓய்வு பெற்ற உதவி கலெக்டர். இவர் நேற்று முன்தினம் நெல்லை மணிமூர்த்தீசுவரத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். செல்லும் வழியில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணம் எடுத்து மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். இதைக்கண்ட மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மணிமூர்த்தீசுவரம் ஆற்றங்கரையில் ஓரிடத்தில் நம்மையாழ்வார் பெருமாள் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். மோட்டார் சைக்கிள் பெட்டியில் மொத்தம் ரூ.39 ஆயிரத்துடன், விலை உயர்ந்த செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றையும் சேர்த்து வைத்து இருந்தார்.

பணம், செல்போன் திருட்டு

பின்னர், தாமிரபரணி ஆற்றில் சென்று குளித்து விட்டு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் பெட்டி திறந்து கிடந்தது. ஆற்றுக்கு குளிக்க சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து நைசாக பணம், பொருட்களை திருடிச்சென்று விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நம்மையாழ்வார் பெருமாள் நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்