பரப்பலாறு அணையை தூர்வார தடையில்லா சான்றுக்கு ரூ.61½ லட்சம் - மத்திய வனத்துறைக்கு, பொதுப்பணித்துறையினர் வழங்கினர்

பரப்பலாறு அணையை தூர்வார தடையில்லா சான்றுக்கு ரூ.61½ லட்சத்தை மத்திய வனத்துறைக்கு பொதுப்பணித்துறையினர் வழங்கினர்.

Update: 2020-03-09 22:00 GMT
சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைப்பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கால்வாய் மூலம் சத்திரப்பட்டி, விருப்பாட்சி வழியாக சென்று கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றில் சேருகிறது.

சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதி என 2 ஆயிரத்து 300 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் விருப்பாட்சி, சத்திரப்பட்டி பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் அணை திகழ்கிறது.

பரப்பலாறு அணை கட்டப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை தூர்வாரப்படவில்லை. இதனால் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 35 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் விரைவில் அணை நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. எனவே அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு அணையை தூர்வார தமிழக அரசு சார்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் அணை இருப்பதால் மத்திய வனத்துறையிடம் அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். அந்தவகையில், தடையில்லா சான்றுக்காக மத்திய வனத்துறைக்கு, ரூ.61½ லட்சம் பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்பட்டு்ள்ளது.

இதற்கிடையே அணையை தூர்வாருவதற்கான பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர்கள் தம்பிரான்தோழன், தனசேகரன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடந்து வருகிறது.

முதற்கட்டமாக அணையை அளவீடு செய்து கற்களை ஊன்றும் பணி நடக்கிறது. அதாவது வண்டல் மண், மணல் உள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு 3 இடங்களில் கற்கள் ஊன்றப்பட்டுள்ளன. தடையில்லா சான்று கிடைக்கும் பட்சத்தில் இந்த ஆண்டிலேயே அணை தூர்வாரப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்